உதகை அருகே அதிரடி சோதனை: 100 கேன்களில் பதுக்கி வைத்த பெட்ரோல்-டீசல் பறிமுதல்...!
Raid Near Ooty Petrol and Diesel Stockpiled 100 Cans Seized
நீலகிரி மாவட்டம் உதகை அருகிலுள்ள கேத்திபாலடா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சிறிய கடையில், பெட்ரோல் மற்றும் டீசலை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அதிகாரியின் உத்தரவின் பேரில், பறக்கும் படை அதிகாரி ஜவகர் தலைமையில் அந்தக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது கடையின் திரைமறைவான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.மேலும் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 200 லிட்டர் அளவிலான பெட்ரோல் மற்றும் டீசல் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே எரிபொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த எரிபொருள் கேன்களை பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தனர்.தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், அதிக லாபத்திற்காக பெட்ரோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Raid Near Ooty Petrol and Diesel Stockpiled 100 Cans Seized