தரிசனப் பயணம் அதிரடி திருப்பம்...! காரில் ரூ.65 லட்சம்...! -அலிபிரியில் விஜிலென்ஸ் சோதனை
Pilgrimage Takes Dramatic Turn 65 Lakhs Found Car Vigilance Check Alipiri
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த நீலமேகம் (62) மற்றும் திருப்பதி கொர்லகுண்டாவை சேர்ந்த வெங்கடேஷ் (29) ஆகியோர், நேற்று திருப்பதி மலைக்கு தரிசனத்திற்காக காரில் அலிபிரி சோதனைச் சாவடிக்கு வந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கமான பாதுகாப்பு சோதனையாக அவர்களின் காரை ஆய்வு செய்தனர்.சோதனையின் போது காரில் இருந்த ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தொகையை உடனடியாக பறிமுதல் செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள், மேலதிக நடவடிக்கைக்காக அலிபிரி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.அலிபிரி காவல் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா, நீலமேகம் மற்றும் வெங்கடேஷை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அந்த பணம் சென்னையை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என அவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த தகவலின்படி, கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களை சேர்ந்த சிலர் திருப்பதி மலைக்கு வந்து வரி சுமையின்றி தங்க நாணயங்களை வாங்கி செல்லும் மறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவற்றை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து சுமார் 15 சதவீதம் வரை கமிஷன் பெறும் வலையமைப்பு செயல்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வலையமைப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை பணச் சுழற்சி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பிடிபட்ட நீலமேகம் மற்றும் வெங்கடேஷ் இந்தக் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Pilgrimage Takes Dramatic Turn 65 Lakhs Found Car Vigilance Check Alipiri