வெயிலில் வாடிய தென் தமிழகம்…! - நெல்லை-தென்காசி-தூத்துக்குடியில் திடீர் கனமழை...! - Seithipunal
Seithipunal


கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி,நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக சாரல் மற்றும் கனமழை பெய்து வெப்பத்தை தணித்தது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அணைகள் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை தொடங்கியது. பின்னர் இன்று அதிகாலை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

நாங்குநேரி, களக்காடு, அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்ததால் வெப்பம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.ஆனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மீது திடீர் மழை தாக்கியதால் விவசாயிகளுக்கு கவலை உருவாகியுள்ளது.

மாநகரில் அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து, சூடாக இருந்த நிலத்தை குளிர்ச்சியடையச் செய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து எஸ்டேட்டில் 12 மில்லிமீட்டர், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெயிலை உடைத்து இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து தென்காசி, கடையம்,ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பொழிந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் திடீரென கனமழை கொட்டியது. முத்தையாபுரம், விமான நிலையம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான உப்பளங்கள் நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இன்றைய காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச மழை முத்தையாபுரத்தில் 88 மில்லிமீட்டர், தூத்துக்குடி விமான நிலையத்தில் 67 மில்லிமீட்டர், புதுக்கோட்டையில் 47 மில்லிமீட்டர் என பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, ஓட்டப்பிடாரம், பன்னம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

மேலும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Southern Tamil Nadu Withered by Heat Sudden Heavy Rains Nellai Tenkasi and Thoothukudi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->