இன்ஸ்டாகிராமில் அவதூறு பேச்சு..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகாரில் வாலிபர் அதிரடி கைது...!
Defamatory remarks on Instagram Youth arrested complaint Minister Adhav Arjuna
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாக பேசி, அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் இளைஞரை காவலர்கள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜின் மகன் செல்வராஜ் (36). தி.மு.க. பிரமுகரான இவர், தற்போது திருப்பூரில் பழைய இரும்பு விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்து, அதனை காணொளியாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகி ஒருவர் சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செல்வராஜ் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் திருப்பூருக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்தனர்.பின்னர் அவரை விளாத்திகுளம் பகுதிக்கு அழைத்து வந்த காவலர்கள், உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வராஜுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கி உத்தரவிட்டார்.அதன்படி, தொடர்ந்து 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு சூரங்குடி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
English Summary
Defamatory remarks on Instagram Youth arrested complaint Minister Adhav Arjuna