முயற்சிக்கு ஏது வயது...? 51 வயதில் நீட் தேர்வில் கெத்து காட்டி எம்.பி.பி.எஸ் சீட் பெற்ற அசத்தல் மனிதர்...!
What age effort An amazing man who cracked NEET exam and got MBBS seat age 51
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இளம் வயதினருடன் போட்டியிட்டு மருத்துவப் படிப்பில் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ள அவரது விடாமுயற்சி பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலத்திலேயே மருத்துவராக வேண்டும் என்ற ஆவல் சுரேஷ்குமாருக்கு இருந்துள்ளது. ஆனால், அப்போது அந்தக் கனவை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மருத்துவம் படிக்கும் ஆசை அவரை விட்டு விலகவில்லை.மருத்துவக் கல்வி மீதான தனது கனவை மீண்டும் கையில் எடுத்த சுரேஷ்குமார், கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதினார். ஆனால், அந்த முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும், தோல்வியால் துவண்டு விடாமல் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்தார்.கடந்த ஆண்டு தாயும், மகளும் ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இடங்களைத் தேர்வு செய்த செய்தி, சுரேஷ்குமாரின் மருத்துவக் கனவுக்கு மேலும் உத்வேகம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மீண்டும் தீவிரமாகத் தயாராகி 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்கொண்டார்.இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 192 மதிப்பெண்கள் பெற்ற சுரேஷ்குமார், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றார்.
சென்னையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட அவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்துள்ளார். 51 வயதில் மருத்துவக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க உள்ள அவரது முயற்சி, கலந்தாய்வில் பங்கேற்றவர்களிடையே வியப்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், “இதுவரை ரத்தப் பரிசோதனை சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றி வந்தேன். தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவப் படிப்பை தொடர முடிவு செய்துள்ளேன். எனது சொந்த ஊரில் உள்ள மருத்துவக் கல்லூரியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே. நீண்ட காலமாக மனதில் இருந்த மருத்துவக் கனவை தற்போது நனவாக்கப் போகிறேன். எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பை முழுமையாக நிறைவு செய்து, நிச்சயம் மருத்துவராக பணியாற்றுவேன்” என்று சுரேஷ்குமார் தெரிவித்தார்.
English Summary
What age effort An amazing man who cracked NEET exam and got MBBS seat age 51