அரசு பேருந்தில் 'கொடூரமடா' என சர்ச்சை வாசகம்...! இணையத்தில் வைரலானதால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...!
Controversial slogan Kooduramada government bus Officials take action after it goes viral internet
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடந்த வினோத சம்பவம் பயணிகளை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. பேருந்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு பெயர்ப்பலகையில் இடம்பெற வேண்டிய வழித்தடம் மற்றும் ஊர் பெயருக்கு பதிலாக, சம்பந்தமே இல்லாத சர்ச்சைக்குரிய வாசகம் தோன்றியுள்ளது.

பேருந்தை நோக்கி வந்த பயணிகள், பெயர்ப்பலகையில் வழக்கமான ஊர் பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அந்த பேருந்து எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதை உறுதி செய்ய முடியாமல் சிலர் குழப்பமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு பெயர்ப்பலகைகளின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த சில காலமாகவே, அரசு பேருந்துகளின் மின்னணு பெயர்ப்பலகைகளில் ஊர் பெயர்களுக்கு பதிலாக வேறு வாசகங்கள் திடீரென தோன்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து, மின்னணு பலகைகளில் அத்துமீறி மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தினசரி நம்பி பயணிக்கும் அரசு பேருந்துகளின் மின்னணு தகவல் பலகைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு, இதுபோன்ற குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
English Summary
Controversial slogan Kooduramada government bus Officials take action after it goes viral internet