நண்பராக நெருங்கி நகை பறித்த கொடூரம்...! கத்தியால் குத்திய வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை...!
cruelty stealing jewelry from close friend 7 years prison stabbing
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குரங்கணி தெற்கு தெருவைச் சேர்ந்த சத்தியகலா (45), கணவரை இழந்த பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். 2015-ஆம் ஆண்டு கணவர் மரணமடைந்ததையடுத்து, வாழ்க்கையை தனித்துப் போராடி நடத்தி வந்த நிலையில், குலையன்கரிசலைச் சேர்ந்த செல்வகணேசன் (42) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பழக்கம் காலப்போக்கில் நெருக்கமாக மாறி, இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வருவது வழக்கமாக இருந்தது.இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, பல கோவில்களுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த இருவரும் குரங்கன்தட்டு விலக்கு பகுதியில் நடந்து வந்தபோது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
திடீரென செல்வகணேசன் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும், அதற்கு சத்தியகலா மறுப்பு தெரிவித்ததையடுத்து, ஆத்திரமடைந்த அவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அப்போது, சத்தியகலாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்ததுடன், முன்கூட்டியே வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சத்தியகலா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், செல்வகணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்து வந்தது.
இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதி பர்ஷாத் பேகம், குற்றச்சாட்டுகள் உறுதியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, செல்வகணேசனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
cruelty stealing jewelry from close friend 7 years prison stabbing