சிவகங்கையில் பேரதிர்ச்சி...! 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்த கொடூரன் கைது...!
cruel man who took obscene pictures of more than 100 young women arrested Sivagangai
காரைக்குடி அருகே கல்லூரி மாணவியை ரகசியமாக ஆபாசமாக படம் பிடித்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு செல்போன்களில் 60-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது செல்போனில் பேசுவது போல் அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவியின் அருகில் நின்று அவரை ரகசியமாக ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த மற்றொரு மாணவி உடனடியாக பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரிடம் இருந்த இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 60 இளம் பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் இருந்தது தெரியவந்தது.
இந்த விசாரணையில், அந்த நபர் கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (42) என்பதும், காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று பெண்களை ரகசியமாக படம் பிடிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ரகசியமாக படம் பிடித்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. செந்தில்குமாரின் செயல்களை அறிந்த அவரது மனைவி, அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
எனினும், அவர் தனது நடவடிக்கைகளை கைவிடாததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் செந்தில்குமாரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த காவலர்கள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
cruel man who took obscene pictures of more than 100 young women arrested Sivagangai