ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டுவதில் முறைகேடு; சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
Court orders Chennai Corporation to provide an explanation regarding irregularities in the construction of the Otteri Nalla canal bridge
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் 2-வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலத்தை கட்டுவதற்கு, 'தாமஸ் அய்யாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் வழங்கியது.
இதில் திட்ட மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி, அரசு பணத்தை தவறான பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி, இது தொடர்பான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறித்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் சரவணபவநாதன் , தற்போதைய தலைமை பொறியாளர் சங்கரவேலு, மேற்பார்வை பொறியாளர் கணேசன், உதவி செயற் பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தனியார் நிறுவனதுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாலம் காட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய வகையில் 20 லட்ச ரூபாயும், விளக்குகள் அமைப்பதற்காக 20 லட்ச ரூபாயும், தளவாட பொருட்களை இடமாற்றம் செய்ததற்காக 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், இதர செலவீனங்களுக்காக 31 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும் என 92 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதே தவிர, நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், விளக்குகள் அமைக்க 11 ஆயிரத்து 470 ரூபாய் மட்டுமே செலவாக்கியுள்ளது என்பது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தளவாட பொருட்கள் இடமாற்றம் மற்றும் இதர செலவீனங்களுக்காக எந்த வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் 08 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்த புகாரில் விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பிரபாகரன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.
English Summary
Court orders Chennai Corporation to provide an explanation regarding irregularities in the construction of the Otteri Nalla canal bridge