'திருமணம் செய்து கொண்டோம் பாதுகாப்பு வழங்குங்கள் ' என தக்கலை காவல் நிலையம் வந்த காதல் ஜோடி
Couple arrives at Thakkalai police station says We got married please provide security
கன்னியாகுமாரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்த லேத் பட்டறை தொழிலாளி 29 வயதான விக்னேஷ் என்பவர். இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையத்தை சேர்ந்த 21 வயதான ஜனனிஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் இணையதளம் மூலம் பழக்கமாகியுள்ளது.

இது நாளடைவில் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே, ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தப்போது, அவர் தனது காதல் குறித்து தெரிவித்துள்ளார். இதற்கு ஜனனிஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆகையால் கடந்த 27-ந்தேதி வீட்டிலிருந்து ஓடிவந்த ஜனனிஸ்ரீ, பேருந்து மூலம் தக்கலை வந்துள்ளார்.
பிறகு தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். அங்கு அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை காவல் நிலையம் வந்து சரணடைந்தனர்.அங்கு வந்த அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியிலுள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரது குடும்பத்திற்கும் காவலர்கள் தகவல் தெரிவித்ததுடன், அவர்கள் காவல் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை காவலர்கள் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர்.
English Summary
Couple arrives at Thakkalai police station says We got married please provide security