லஞ்சம் கேட்டதாக சர்வேயர் மீது புகார்... 'காலம் மோசமாக உள்ளது' என்ற பேச்சால் பரபரப்பு...!
Complaint against surveyor demanding bribe Times bad creates stir
புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாய நிலத்தை பட்டாவில் உட்பிரிவு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் சர்வேயரின் பேச்சு அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் உருமையா. இவரது மனைவி பெயரில் விவசாய நிலம் உள்ளது.

அந்த நிலத்தை பட்டாவில் உட்பிரிவு செய்வதற்காக புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அவர் அணுகியுள்ளார்.நிலம் தொடர்பான பணிகளை முடித்துத் தருவதற்காக சர்வேயர் எழில்கொடி பணம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உருமையா ஏற்கனவே ரூ.2 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டாவில் உட்பிரிவு செய்யும் பணியை முடித்துத் தருவதற்காக மேலும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சர்வேயர் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியில், விவசாயி உருமையாவிடம் சர்வேயர் எழில்கொடி பணம் குறித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதில், “வேலை அவ்வளவு சீக்கிரமாக முடியாது. எப்போது முடியும் என்றும் உறுதியாகத் தெரியாது.
செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியாத நிலை உள்ளது. நம்முடைய கையைக்கூட நம்மால் நம்ப முடியவில்லை.நீங்கள் எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுங்கள். ரூ.1,000 போதாது. ரூ.2,000 கொடுங்கள்” என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், “என்னிடம் பணம் அனுப்புவதற்கான வசதி இல்லை. வீட்டில் உள்ளவர்களின் பணப்பரிமாற்ற எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம். அந்தப் பணத்தை நான் யாருக்கு மாற்றுவது? யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமாக இருக்கிறது” என்றும் அந்த காணொளியில் சர்வேயர் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், விவசாயியிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
English Summary
Complaint against surveyor demanding bribe Times bad creates stir