தமிழக தொகுதிகள் கூடுமா? குறையுமா? - சட்டப்பேரவையில் வெடித்த தொகுதி மறுவரையறை விவாதம்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக, த.வெ.க., அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாறி மாறி தங்களது கருத்துகளை முன்வைத்ததால், அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக சில ஊடகங்களும், சில அரசியல் கட்சிகளும் தவறான புரிதலுடன் செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.“நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சரும் தமிழக அரசும் உறுதியாக உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதையே வலியுறுத்துகிறது. நியாயமான தொகுதி மறுவரையறையைவிட, தற்போதைய தொகுதி எண்ணிக்கையை பாதுகாக்கும் வகையிலான முடிவே தேவை” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேசிய கருத்துகளையும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்றார்.

“தென் மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசிய உரை குறித்து அமைச்சர் குறிப்பிட்டார். 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை தொடர வேண்டும் என்றுதான் சட்டப்பேரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தையே நாங்கள் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். ஆனால், முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் 543 என்ற எண்ணிக்கையைப் பற்றி முதல்-அமைச்சர் பேசவில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.மீண்டும் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முந்தைய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

“திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யக்கூடாது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்ததைப் போன்ற சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வெளிநடப்பு செய்தால், அது மத்திய ஆளும் கட்சிக்கே சாதகமாகிவிடும்.தமிழகத்தின் நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

ஆனால், தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்காத நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை என்பது சட்டப்படியான நடைமுறை என்று குறிப்பிட்டார்.

“தொகுதி மறுவரையறை என்பது சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் நடவடிக்கை. தமிழகத்தில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? குறைய வேண்டுமா? என்பதை அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்ததைப் போன்ற சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை என்று தெரிவித்தார்.“அத்தகைய சட்டத்தை கொண்டு வருவதற்காக தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய கோரிக்கை” என்று அமைச்சர் கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக கூறியதற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பதிலளித்தார்.“தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்துக்கு குறையாமல் இருந்தால் அதை ஆதரிப்பதாக த.வெ.க. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் த.வெ.க. பொதுச்செயலாளர் பங்கேற்றார்.

திமுக தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் த.வெ.க.வும் கையெழுத்திட்டது.அப்போது த.வெ.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கணேஷ்குமார் தெரிவித்தார்.பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் பேசுகையில், தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்தார்.

“தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்ல வாய்ப்பாக அமையும். 50 சதவீதம் வரை தொகுதிகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துகள் மாறுபட்டு இருப்பதாக அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டினார்.மேலும், பாமக உறுப்பினர்களை விமர்சித்துப் பேசிய அவர், “பாமக நண்பர்கள் ராமதாசை பாதுகாப்பதைவிட, மோடி மற்றும் அமித்ஷாவை பாதுகாப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்” என்று கூறினார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதனால், சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Tamil Nadu constituencies increase Will they decrease debate over delimitation constituencies erupted Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->