கட்டுமானப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பு..? முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளதாக என கேரளம் முதல்வர் பதிவு..!
Keralam CM records that CM Vijay has promised to exempt Kerala from restrictions on construction materials
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு பின்னர் கேரளம் திரும்பிய அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதல்வர் விஜய் உடன் ஆக்கபூர்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். நமது மாநிலத்திற்குச் சாதகமான முடிவை எட்டுவதற்கு, இது தொடர்பாக விரைவில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.'' என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும்அபாயம் உள்ளது. அத்துடன், கனிம வளங்கள் தொடர்ந்து தோண்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிப்படையும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 03 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தத் தடையில் இருந்து தங்கள் மாநிலத்திற்கு தளர்வு வழங்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு, கேரள முதல்வர் வி.டி.சதீசன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது; ''தமிழகத்தில் இருந்து ஜல்லிக் கற்கள் உட்பட கட்டுமானப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தகவலை அறிந்தேன். இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானக் கற்கள் வருவது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் கற்களை நம்பியே இருக்கின்றன. எனவே, தற்போதைய தடையால் கேரளாவில் நடைபெற்றுவரும் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு, அவை தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென் மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் முக்கியமானவை.
இயற்கை வளங்களை நிலையாகப் பாதுகாக்கும் தமிழக அரசின் கொள்கை நோக்கங்களை கேரளா பாராட்டுகிறது. அதேநேரம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவையைக் கருத்தில்கொண்டு ஒரு சமநிலையான அணுகுமுறையை உருவாக்கினால், உங்கள் கொள்கையிலும் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே, கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் ஜல்லிக் கற்களை மட்டும் தடையின்றி கொண்டு செல்ல வசதியாக, உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.''என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழகம் பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளதாக கேரள முதல்வர் சதீசன் தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Keralam CM records that CM Vijay has promised to exempt Kerala from restrictions on construction materials