பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா; சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிய முதல்வர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய் இன்று (7.10.2026) செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கு பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் என மொத்தம் 25 அலுவலர்கள் ஓராண்டு அடிப்படைப் பயிற்சி மேற்கொண்டனர். 

உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு உள்ளிட்ட 52 வாரகால இப்பயிற்சியில், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குத் தேவையான சட்ட அறிவு, புலனாய்வு நுணுக்கங்கள், மாநில காவல்துறையின் அமைப்பு, நிர்வாகம், அதன் மேம்படுத்தப்பட்ட திறன்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு, நுண்ணறிவு, சமுதாயக் காவல் பணி, தலைமைப் பண்பு, தகவல் தொடர்புத் திறன். சட்ட அமலாக்கத் திறன், இணையவழிக் குற்றங்கள். CCTNS (Crime and Criminal Tracking Network and Systems) செயலாக்கம் மற்றும் காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் விரிவான பயிற்சிகள் அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்பட்டது.

அத்துடன், இந்த இப்பயிற்சி அலுவலர்கள் 10 நாட்கள் தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையினருடனான (STF) வனப் பயிற்சி, மலையேற்றம், நீச்சல், தற்காப்புக் கலை, யோகா, துப்பாக்கிகளைக் கையாளுதல், வாகனங்களை இயக்குதல் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டனர். 

மேலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஜல்லிக்கட்டு. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் போன்ற நிகழ்வுகளின்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம் இப்பயிற்சியாளர்களுக்கு நடைமுறை சார்ந்த கள அனுபவமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதல்வர் விஜய், காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பயிற்சியில் ஒட்டுமொத்த அளவில் சிறந்து விளங்கிய டி. ஆனீஷ் பிரதீப்-க்கு வீரவாள் (Sword of Honour), முதலமைச்சரின் கோப்பை மற்றும் தங்கப் பதக்கத்தையும், செல்வி ஓ. கார்த்திகா அவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தையும். பி.எஸ். திவ்யா-க்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கியதோடு, பிற பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

அதற்கு முன்னதாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவர் அவர்கள் முன்னிலையில், பயிற்சியை நிறைவுசெய்து களப்பணிக்குச் செல்லும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், எந்தவித அச்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார், அரசு தலைமைக் கொறடா ரா.சபரிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. காவல்துறை இயக்குநர் (பயிற்சி) மற்றும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் (பொறுப்பு) ராஜீவ் குமார், இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay presented trophies and medals at the passing out parade of the 14th batch of trainee Deputy Superintendents of Police


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->