தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Chithirai chariot at Thanjavur Big Temple Thousands of devotees participate
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்றது.தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மொத்தம் 14 இடங்களில் தேர் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
English Summary
Chithirai chariot at Thanjavur Big Temple Thousands of devotees participate