முதல்-அமைச்சர் கோப்பை: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
Chief Ministers File Udhayanidhi Stalin awarded prizes to the winners
முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கான இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் முதல்-அமைச்சர் கோப்பை 2025-ஆம் ஆண்டிற்கான போட்டியையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 25.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகைக்காக மட்டும் 37.00 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 83.37 கோடி ரூபாயை முதல்-அமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 பிரிவுகளில் 16,28,338 பேர் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, 37 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு, முதல்-அமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டிகளில் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டை காட்சிப் பிரிவாக (Demonstration Sport) அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (Olympic Council of Asia), வரவிருக்கும் 2026-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மொத்தம் 11 இ-ஸ்போர்ட்ஸ் பிரிவுகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்ற 6 விளையாட்டுகளில் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
மாநில அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பை - 2025 இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் 3 விளையாட்டு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுதமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து, மொத்தம் 9,75,000 க்கான பரிசுத் தொகை காசோலைகள், சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 14.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கூடைப்பந்து பயிற்சி இயந்திரம் மற்றும் 14.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி வாலிபால் பயிற்சி இயந்திரங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வே. மணிகண்டன், பொதுமேலாளர் எல். சுஜாதா, ஸ்கை இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு இ-ஸ்போர்ட்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Chief Ministers File Udhayanidhi Stalin awarded prizes to the winners