2026 புத்தாண்டு பாதுகாப்பு வளையத்தில் சென்னை: 19,000 போலீசார், டிரோன் கண்காணிப்பு, பட்டாசுக்கு தடை!
Chennai under security cordon New Year 2026 19000 police personnel drone surveillance and ban fireworks
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விரிவான மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், புத்தாண்டு விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற, முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரின் கடற்கரை பகுதிகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட உள்ளனர்.புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு துணையாக 1,500 ஊர்காவல் படையினரும் பணியில் இறக்கப்பட உள்ளனர். 31-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக தொடங்கும்.மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 12 காவல் மாவட்டங்களில் 425 இடங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து, 30 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், ‘பைக் ரேஸ்’ போன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்கும் வகையில் 30 தனிக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.31-ஆம் தேதி மாலை முதல் 1-ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவும், இறங்கி விளையாடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குதிரைப்படை போலீசார் ரோந்து மேற்கொள்வார்கள்.
மணலில் எளிதாக செல்லக்கூடிய சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதுடன், கடற்கரை பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்படும். டிரோன் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். கடலோர பாதுகாப்பு குழு வீரர்களும், நீச்சல் படையினரும் அவசர நிலைக்குத் தயாராக இருப்பார்கள். எச்சரிக்கை பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்படும்.
கடுமையான கட்டுப்பாடுகள்
புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல் நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது அருந்தும் இடங்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், நட்சத்திர ஓட்டல்களிலும், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் செயல்பட உள்ளன.
அதிக ஒளிரும் விளக்குகள் மற்றும் பி.ஏ. சிஸ்டம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
பட்டாசுக்கு தடை – போதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி கட்டாயம்.போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இதனால் வேலை வாய்ப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
எனவே, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லாத பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அமைதியாகவும் இனிமையாகவும் 2026 புத்தாண்டை வரவேற்க சென்னை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
English Summary
Chennai under security cordon New Year 2026 19000 police personnel drone surveillance and ban fireworks