வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள், 1,320 மோட்டார்கள் தயார் - கமிஷனர் சமீரன்!
Chennai Corporation Steps Up Monsoon and Dengue Preparedness 215 Relief Camps and 1320 Pumps Kept Ready Says Commissioner Sameeran
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இன்று அடையாறு முகத்துவாரப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். எல்நினோ (El Niño) தாக்கத்தால் கனமழை பொழியக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அனைத்து பிரதான ஆறுகளின் முகத்துவாரங்களிலும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மழை வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையின்றி உணவளிப்பதற்காக 111 பிரத்யேகச் சமையல் கூடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரத் தேவையின் பொருட்டு அம்மா உணவகங்கள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் 44 சமையல் மையங்களையும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து ‘சென்னை செயலி’ (Namma Chennai App) மூலமாக இதுவரை 3,500 தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகக்கூடிய 290 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடையாத சூழல் உள்ளதால், அங்கு தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற உயர் திறன் கொண்ட மோட்டார் பம்ப்புகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான 670 பம்ப்புகளுடன், வாடகைக்கு எடுக்கப்பட்ட 650 பம்ப்புகள் என மொத்தம் 1,320 மோட்டார் பம்ப்புகளும், 38 மீட்புப் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், நகரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகள் குறித்துப் பேசிய ஆணையர் சமீரன், சென்னையில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் தீவிரப் பணிகளில் 3,690 மலேரியா/கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
English Summary
Chennai Corporation Steps Up Monsoon and Dengue Preparedness 215 Relief Camps and 1320 Pumps Kept Ready Says Commissioner Sameeran