ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
Annamalai Demands SIT Probe into Gem Granites Veeramani POCSO Case Urges Action Against Officers and Politicians Involved in Cover-Up
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கில் உள்ள உண்மைகளையும், பல ஆண்டுகளாக நடைபெற்ற மூடிமறைப்பு நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வர உடனடியாகச் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலியல் அத்துமீறலுக்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியையும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறி ஆரம்பத்தில் வழக்கை மூடத் தமிழகக் காவல் துறை முயன்றதைச் சுட்டிக்காட்டினார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகளையும், மத்திய குற்றப்பிரிவின் (CCB) துரிதமான விசாரணையையும் பாராட்டிய அவர், வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைதானதுடன், இக்குற்றச் செயலால் பல சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை வீரமணி மற்றும் அவரது உதவியாளர்களோடு மட்டும் முடிந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, "கடந்த பல ஆண்டுகளாக இக்குற்றங்கள் தொடர உதவியாக இருந்த அத்தனை காவல் துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கைத் திசைதிருப்ப முயன்ற ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதில் பெரும் தொகைப் பணம் கைமாறியுள்ளதால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது அவசியமாகும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்களும் கண்ணியமும் எக்காரணத்தைக் கொண்டும் சமரசம் செய்யப்படாமல் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Annamalai Demands SIT Probe into Gem Granites Veeramani POCSO Case Urges Action Against Officers and Politicians Involved in Cover-Up