பெண் மருத்துவர் விபத்தில் பலியான விவகாரம்! குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு...! - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பின் பின்னணி என்ன..?
case female doctor who died accident 1 crore compensation family What background dramatic verdict given by court
சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் இமயவள்ளி உயிரிழந்த சாலை விபத்து தொடர்பாக தொடரப்பட்ட இழப்பீட்டு வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி கும்பகோணம் அருகே உள்ள நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் நிகழ்ந்தது.

அன்றைய தினம் பல் மருத்துவர் இமயவள்ளி தனது கணவர் ராதாகிருஷ்ணனுடன் பயணிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தை ராதாகிருஷ்ணன் இயக்கி வந்த நிலையில், எதிரே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில், வாகனம் கடுமையாக சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த இமயவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய நிலையில், கணவர் ராதாகிருஷ்ணன், மகன் ஹெம்தேவ் தர்சன், தந்தை செல்வம் மற்றும் தாய் ஜோதி ஆகியோர் இணைந்து, சென்னையில் செயல்படும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் நிவாரணம் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.பி. நஷீர்அலி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எஸ். பிலால், "இமயவள்ளி பயணிகள் வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தார். எதிரே வந்த சரக்கு வாகனம் அதிவேகத்திலும் அலட்சியமான முறையிலும் இயக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்குக் காரணம்.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.இதற்கு மறுப்பு தெரிவித்த காப்பீட்டு நிறுவனம் தரப்பில், வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை ஏற்க முடியாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் விரிவாக பரிசீலித்த நீதிபதி, "உயிரிழந்த இமயவள்ளி தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி மாதம் ரூ.55 ஆயிரத்து 200 வருமானம் பெற்று வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சொந்தமாக மருத்துவ மையத்தையும் நடத்தி வந்துள்ளார். அவர் உயிரிழந்தபோது வயது வெறும் 35 மட்டுமே என்பதும் பதிவுகளில் உறுதியாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, குடும்பத்தினர் சந்தித்த பொருளாதார மற்றும் வாழ்வாதார இழப்பை கருத்தில் கொண்டு, ரூ.1 கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் அந்த முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
English Summary
case female doctor who died accident 1 crore compensation family What background dramatic verdict given by court