சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சாதித்ததாக கூறும் அமைச்சர் முழு விவரத்தை வெளியிட முடியுமா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!  - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சாதித்ததாக கூறும் அமைச்சர் முழு விவரத்தை வெளியிட முடியுமா? என எதிர்க்கட்சி தலைவர் சிவா சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறியும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக தோல்வி அடைந்த பாடத்திட்டம். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள மனமின்றி, மத்திய அரசின் அடக்குமுறையில் இருந்து மீள முடியாமல் அப்பாடத்திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ஆட்சியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு விழாக்களில் குறிப்பாக கல்வித்துறை மற்றும் மாணவர்களின் விழாக்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மகத்தான வெற்றி பெற்றுவிட்டதாக திரும்ப, திரும்ப பொய்யை சொல்லி மாணவர்களின் மனதில் தவறான பதிவை பதிய வைத்து வருகின்றனர்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்2 பொதுத் தேர்வில் எத்தனைபேர் இயற்பியல், எத்தனை பேர் வேதியியல், எத்தனை பேர் உயிரியல், எத்தனைபேர் கணிதம் பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர், அதில் எத்தனை பேர் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்ணை எடுத்தனர் என்ற விவரத்தை கல்வித்துறை அமைச்சராலும், கல்வித்துறையாலும் அறிவிக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் செய்முறைத்தேர்வுக்கு 30 மதிப்பெண்களை ஆசிரியர்கள் முழுமையாக கொடுத்துவிட்டனர். மொத்த மதிப்பெண்ணில் 70க்கு மீதி 23 மதிப்பெண்களை எடுத்தே பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை  கல்வித்துறையாலோ, சிபிஎஸ்இ பாடத்திட்டம் சிறப்பானது, வெற்ற பெற்றுவிட்டோம் என்று பெருமை பேசிக் கொள்ளும் ஆட்சியாளர்களால் மறுக்க முடியுமா?

அதுபோல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட 5 முக்கிய பாடங்களுடன் துணை ப்பாடங்களாக தமிழ், இந்தி, தகவல் தொழில்நுட்பம், உடற்கல்வி உள்ளிட்ட பல பாடங்களை கூடுதலாக எழுதலாம். அவ்வாறு எழுதுபவர்கள் ஏதேனும் 5 பாடத்தில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் அவர்கள் கணிதம், இயற்பியல், உயிரியல் பாடத்தில் தோல்வி அடைந்திருந்தால் அப்படிப்புகளை அடிப்படையாக கொண்ட மருத்துவம், செவிலியர், இன்ஜினியர் உள்ளிட்ட தொழிற்படிப்புகளை எடுத்து படிக்க முடியாது. இதனை கல்வித்துறை அமைச்சரும், கல்வித்துறையும் மறுக்க முடியுமா?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மீண்டும் கல்வித்துறையும், அமைச்சரும் கூறுவதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி வாரியாக தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்கள், அதில் பெற்ற மதிபபெண்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும். இந்த விவரத்தை வெளியிடும் தைரியம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பெருமையாக பேசிக் கொள்ளும் கல்வித்துறை அமைச்சருக்கு உண்டோ?

சிபிஎஸ்இ தேர்வில் சாதித்தது உண்மை என்றால் ஒரே பள்ளியில் அதிகம் பேர் தோல்வி அடைந்துவிட்டதாக ஆட்சியாளர்களை பெற்றோர்கள் முற்றுகையிட்டது ஏன்? 5 பாடங்களை மட்டுமே தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலானோர் தோல்வி அடைந்துள்ளனர். 5க்கும் மேற்பட்ட பாடங்களை தேர்வு எழுதி முக்கிய பாடங்களில் தோல்வி அடைந்து, துணைப் பாடங்களில் தேர்ச்சி பெற்று அதன்மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதனை மறுக்க முடியுமா? எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளது என்ற விவரத்தை வெளியிட முடியுமா?

 எனவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது முற்றிலும் தோல்வி அடைந்த பாடத்திட்டம். மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் பாடத்திட்டம். இவைகளை மறைத்து சாதித்ததாக கூறுவதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். உண்மையில் சாதித்ததாக கூறும் தைரியம் இருந்தால் தேர்வு குறித்த முழு விவரத்தையும் புதுச்சேரி கல்வித்துறை வெளியிட வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா சவால் விடுத்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can the minister who claims to have succeeded in the CBSE curriculum disclose the full details? The opposition leaders question


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->