கதிகலங்கி போன கோவை மாநகரம்: ஆட்சியர் அலுவலகம், அக்ரானி கடற்படை கணக்குப்பிரிவு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Bomb threat to Coimbatore Collectorate again
கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 02-வது முறையாக இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அலுவலக இ-மெயில் முகவரியை பார்த்துள்ளனர்.
அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஊழியர்கள் அஹீர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததோடு, போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மெட்டல் டிடெக்டர் கருவியுடன் 02 நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவை நீதிமன்றத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து, கோவை ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் என முக்கிய இடங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள அக்ரானி கடற்படை கணக்குப்பிரிவு அலுவலகத்துக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தியத்தில், வெடிகுண்டு ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. கோவையில் தொடரும் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Bomb threat to Coimbatore Collectorate again