85 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: ராகுல், கார்கே பங்கேற்பு..!
Congress Working Committee meeting in Bihar tomorrow after 85 years
பீகாரில் வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தனை முன்னிட்டு, அங்கு 85 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையக் குழு அடுத்த வாரம் பீகாருக்கு செல்லவுள்ள நிலையில், அங்கு தேர்தலுக்கான கவுன்டவுன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 02 முதல் 19-ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு முகாம்களும் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதிகளில் 393 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அதன்படி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அடுத்து, 'இந்தியா' கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பீகாரில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 85 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நாளை (செப்டம்பர் 24) பாட்னாவில் நடைபெறவுள்ளது. அதாவது, கடந்த 1940-ஆம் ஆண்டுக்குப் பிறகு பீகாரில் நடைபெறும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் 'வாக்காளர் அதிகார யாத்திரை' பீகாரில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், இங்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காரிய கமிட்டியின் உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு தெரிவிக்கையில், 'பீகார் மீண்டும் தேசிய அரசியலின் மையமாக மாறியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாட்னாவில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Congress Working Committee meeting in Bihar tomorrow after 85 years