விசிக ரவுடிகளை விட்டுவிட்டு ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்வதா? கேடுகெட்ட ஆட்சி... அண்ணாமலை கொந்தளிப்பு!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Airport moorthy arrest
பாஜக அண்ணாமலை விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் ஸ்டாலின்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி மணி செந்தில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "அந்த வீடியோவை பார்த்தாலே தெரியும். யார் பிரச்சினையை தொடங்கியது.. என்று.
ஆடுதுறை சேர்மன் அண்ணன் ம.க. ஸ்டாலின் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்க வரும்போது கூட வந்தவரை வேண்டுமென்றே வம்பிழுத்து, அவர் மீது காலணிகளை வீசி பிரச்சனை செய்தது அங்கு வந்த விசிக கட்சிக்காரர்கள் தான். அங்கு இருந்த செய்தியாளர்களே அதற்கு சாட்சி. காவல்துறையும் அங்கே இருந்தார்கள்.
காலணிகளை வீசுபவர்கள் மீது உடலை காண்பித்து கொண்டு நிற்க வேண்டும் என சட்டம் சொல்கிறதா..? ஆபாச வார்த்தைகளால் ஏசி பேசி திட்டிக்கொண்டே காலணி வீசுபவர்கள் உயிரை பாதிக்கும் வேறு எதையாவது வீசியிருந்தால் இன்று அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நிலைமையே ஏற்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. அந்த சூழ்நிலையில் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவே போராடினார்.
தற்காப்பு என்பது எப்படி தாக்குதல் வழக்காக மாற முடியும்..? அரசியல் அதிகார நிர்பந்தங்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்க முயன்ற விசிக தொண்டர்கள் மீது விடுதலை சிறுத்தைகளின் தலைமை எடுத்த ஒழுங்கு நடவடிக்கை என்ன..? விமர்சிப்பவர்களை எல்லாம் இப்படித்தான் கட்சிக்காரர்களை விட்டு அடிக்க விடுவார்களா..?? "அமைப்பாய் திரள்வோம்" புத்தகம் எழுதிய தலைவரின் கருத்தியல் பயிற்சி இதைத்தான் போதிக்கிறதா..?? அப்படி என்றால் கட்சியின் தலைமை ஆதரவோடு தான் இந்த தாக்குதல் முயற்சி நடந்ததா..?? ஒரு அமைப்பின் தலைவரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு முன்பே வைத்து செய்தியாளர்களை வைத்துக்கொண்டு, காவல்துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு காலணிகளால் தாக்கியவர்கள் மீது காவல்துறை எடுத்த சட்டப்படியான நடவடிக்கை என்ன??
இதுபோன்ற எந்த கேள்விகளுக்கும் விசிக தலைமையிடமிருந்து பதில் இல்லை.தமிழகக் காவல்துறையிடமும் இல்லை. இந்நிலையில் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தன்னை தற்காத்து கொள்ளப் போராடிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொண்டு வெல்வார் !
இது போன்ற கடின சூழ்நிலைகள் பலரின் ஜனநாயக போலி முகமூடிகளை கிழித்தெறியும். இவர்கள் பேசும் கருத்துரிமை, ஜனநாயக விழுமியங்கள் எல்லாம் சாலையில் நின்று கெட்ட வார்த்தை பேசி காலணி எறிவதில்தான் என்றால், இத்தனை ஆண்டு காலம் அரசியல் நடத்தி, உண்மையில் யார் தோற்று இருக்கிறார்கள் என்பதை புரியும்.
அரசியல் விமர்சனங்களுக்கு எல்லாம் சாலையில் கெட்ட வார்த்தை பேசி , காலணி எறிந்து அடித்துக் கொள்ள ஆரம்பித்தால் , இங்கே சாலைகள் சாலைகளாக இருக்காது. யார் தவறு செய்தாலும் தவறுதான். அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பேசியதில் முரண்பாடுகள்/ தவறுகள் இருந்தால் சட்டப்படி வழக்கு தொடர்ந்து இருக்கலாம். அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி நட்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி இருக்கலாம்.
அதையெல்லாம் விடுத்து, எல்லாவித ஜனநாயக நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை இழந்து, நட்டநடு சாலையில் கெட்ட வார்த்தை பேசி காலணி எறிவதும் தாக்க முனைவதும், அவர் தன்னை காத்துக் கொள்ள, திருப்பித் தாக்கினால் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு வழக்கு கொடுப்பதும், ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் அதிகாரத்தை வைத்துக் கொண்டு கைது செய்வதும் தான் "ஜனநாயகத்தை காப்போம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்தியவர்களின் வேலையா..??
உண்மையில் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் இத்தனை ஆண்டு காலம் பராமரிக்க முயல்கிற ஜனநாயக கருத்துரிமை சார்ந்த , அரசியலை முதிர்ச்சியாக அணுகுகிற முகத்திற்கு இது ஒரு சவால்.
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு இதனால் எந்த அவப்பெயரும் இல்லை. அதனால்தான் அவர் மிகுந்த நிறைவு மிகுந்த புன்னகையோடு காவல்துறை வண்டியில் ஏறுகிறார். அவர் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு என்ன விலை எதிர்பார்த்தாரோ அந்த விலை கேள்விகளாக விசிக தலைவர் திரு.திருமாவளவன் முன்னால் முளைத்து நிற்கின்றன.
அவர் ஒருவேளை பதில் சொல்லாவிட்டால்..காலம் பதில் சொல்லும். இதையெல்லாம் காண்கின்ற மக்களும் ஜனநாயக களத்தில் பதில் சொல்வார்கள். அதுதான் வரலாற்றில் எப்போதும் நடந்து வந்திருக்கிறது.
கருத்துரிமையும் , ஜனநாயக விழுமியங்களும் வெல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Airport moorthy arrest