குடிநீர் திட்டங்களுக்கு நிதி விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்...!
Chief Minister MK Stalin writes Prime Minister seeking release funds drinking water schemes
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பாதுகாப்பான மற்றும் நிலையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ரூ.8,428 கோடி மதிப்பிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் (கட்டம்–3) செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் மற்றும் நிதியுதவி வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள 1.25 கோடி வீடுகளில் 1.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, ஜல் ஜீவன் திட்டத்தில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் ரூ.18,123 கோடி செலவில் பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஒற்றை கிராமத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்கில் ரூ.3,112 கோடி இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், 2024–25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதி இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டப் பணிகள் தடைப்படாமல் தொடர தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2,550 கோடி செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு முக்கியமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் (கட்டம்–3) விரைவில் அனுமதி பெற்று செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தூத்துக்குடி, திருப்பூர்,நாமக்கல், திருச்சி, கரூர்,திண்டுக்கல், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் ரூ.7,590 கோடி மதிப்பிலான 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin writes Prime Minister seeking release funds drinking water schemes