'விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்; முதல்வரின் வாக்கை நிரூபிக்கும் விதமாக போட்டிகள் நடைபெறுகிறது': அன்பில் மகேஷ் பேச்சு..!
Anbil Mahesh speech on transforming sports into a means of improving lives
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான 66-வது குடியரசு தின தடகள போட்டியின் தொடக்க விழா இன்று (அக்டோபர் 29) தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்த நிலையில், எம்.பி. க்களான கல்யாண சுந்தரம், முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன் வரவேற்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி, போட்டியில் முதல் 03 நாட்கள் மாணவிகளுக்கும், அடுத்த 03 நாட்கள் மாணவர்களுக்கும் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அளவிலான 66-வது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்திய அளவில் விளையாட்டுக்கான தலைமை இடமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக துணை முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவரது முயற்சியால் நடைபெறும் இப்போட்டியில் 6,358 பேர் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று முதல் மாணவிகளுக்கும், நவம்பர் 01-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. குடியரசு தின தடகளப் விழா போட்டிகள், பாரதியார் பிறந்த நாள் விழா போட்டிகள் என எந்த போட்டிகளாக இருந்தாலும் துணை முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர் என்றும் பேசியுள்ளார்.

இவ்வாறான போட்டிகள் மூலம் பல பேர் தங்கப் பதக்கம் வென்றுள்ளதாகவும், அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்று சுட்டிக்காட்டியதோடு, இவர்களைப் பள்ளிக் கல்வித் துறைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறதாகவும் தெரிவித்துலாளர்.
மேலும், விளையாட்டு வீரர்களை அரசு வேலையில் அமர்த்தும் அளவுக்கு துணை முதல்வர் பணியாற்றி வருவதாகவும், விளையாட்டை வெறும் விளையாட் டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்கிற தமிழக முதல்வரின் வாக்கை நிரூபிக்கும் விதமாக இப்போட்டி நடைபெறுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Anbil Mahesh speech on transforming sports into a means of improving lives