அமோனியா வாயு கசிவு...! 14 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை...! - பெண் தொழிலாளர் உயிரிழந்ததால் சோகம்...!
Ammonia gas leak Death toll rises 14 Tragedy over death female worker
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று மேலும் ஒரு பெண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த ‘புனித பீட்டர் பால்’ கடல் உணவு பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் வடமாநில பெண் தொழிலாளர்கள் உட்பட 74 பேர் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் வரை 10 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா (28), பிங்கி ஜூஜிங்கா (21) மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித்ரா ஜிங்கா (22) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்திருந்த நிலையில், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த பிரீத்தி தேவி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, மஞ்சங்காரணை மற்றும் செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 வடமாநில பெண் தொழிலாளர்கள் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 தொழிலாளர்களை அசாம் மாநில பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சுராஜித் போர்வா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுராஜித் போர்வா, “தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சிகிச்சை மற்றும் ஒத்துழைப்புக்கு அசாம் மாநில அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குணமடைந்தவர்களை நேரில் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
English Summary
Ammonia gas leak Death toll rises 14 Tragedy over death female worker