நடிகர் மோகன்லாலுக்கு பாராட்டு விழா..கேரள அரசு முடிவு!
Actor Mohanlal to receive a felicitation Kerala government decision
‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றதற்காக நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறது.
மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்தநிலையில் டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது சமீபத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து மோகன்லால் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றார்.
மோகன்லால் தாதாசாகேப் பால்கே விருது பெற்றதையடுத்து கேரள அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறது. ‘லால்-சலாம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பாராட்டு விழா நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது என்று கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார். மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும், இந்த மதிப்புமிக்க விருதை மோகன்லால் வென்றது மாநிலத்திற்கு ஒரு பொன்னான தருணம் என்றும் கேரள அமைச்சர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற்றப்படும். பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. அக்டோபர் 4 -ந் தேதி நடக்கும் விழாவில் மோகன்லால் கவுரவிக்கப்படுகிறார். விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Actor Mohanlal to receive a felicitation Kerala government decision