இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தையும் மீட்க வேண்டும்..எதிர்கட்சித்தலைவர் வலியுறுத்தல்!
All Indian fishermens boats must be rescuedopposition leader emphasizes
இந்திய மீனவர்களை தாக்கி, படகுகளை கொள்ளையடிக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க ஒருமுறை இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அங்குள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தையும் மீட்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :காரைக்கால் மீனவ கிராமமான கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்திருப்பகு மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த மீனவர்கள், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் சென்றவர்கள். ஆனால், இலங்கை கடற்படையினரால் தொடரும் அத்துமீறிய செயல், காரைக்கால் மீனவ சமூகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறித்துள்ளது.
கடந்த ஜனவரி 2025இல் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கைது சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் காரைக்கால் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்து. கைது செய்யப்பட்ட செல்வம், வேல்முருகன், சுந்தர், கந்தசாமி, பாலகுரு, ரவி, வசந்த், ஸ்ரீமுருகன், ஏழுமலை, சூரியமூர்த்தி, கோபி, துளசிநாதன் ஆகிய 12 மீனவர்களின் குடும்பத்தினர் இன்று கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்து கதறி வருகின்றனர்.
இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து கொள்வதும், பின்னர் தமிழக மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களின் அழுத்தத்தால் ஒன்றிய அரசின் முயற்சியின் காரணமாக மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும், அவர்களது படகுகளை இலங்கையே வைத்துக் கொள்வதுமாக உள்ளது. அவ்வாறு படகுகளை பறி கொடுக்கும் மீனவர்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையில் உயர்வது என்பது கானல் நீராகிவிடுகிறது. ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையின் அத்துமீறிய மற்றும் கொடூர செயலால் காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் வீணாகி வருகிறது.
எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க ஒருமுறை இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அங்குள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தையும் மீண்டும் இந்தியாவிற்கே கொண்டுவரச் செய்ய வேண்டும்.
மீனவ சமூகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும், இலங்கை கடற்படையிடம் சிக்கியுள்ள மீனவர்களை மட்டுமின்றி அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக மீட்க ஒன்றிய அரசும், புதுச்சேரி மாநில அரசும் உடனடியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என எதிர்கட்சித்தலைவர்இரா.சிவா கூறியுள்ளார்.
English Summary
All Indian fishermens boats must be rescuedopposition leader emphasizes