கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி...மரத்தில் மோதி அப்பளம்போல நொறுங்கியது!
A runaway mini truck crashed into a tree and crumpled like an accordion
கோவில்பட்டி கழுகுமலை பகுதியில் டீசல் ஏற்றிவந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார்.இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டியில் இருந்து கழுகுமலையை நோக்கி நேற்று மதியம் டீசல் ஏற்றி கொண்டு மினிலாரி ஒன்று பழங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியை சுந்தர்ராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்தநிலையில் கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் அம்பேத்கர் நகர் பகுதி அருகே மினி லாரி செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதையடுத்து அந்த லாரி சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மினிலாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சுந்தர்ராஜ் படுகாயமடைந்தார்.
போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து வந்து மினிலாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த டிரைவர் சுந்தர்ராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மினிலாரியில் இருந்த சுமார் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் சேதமடையவில்லை. அவ்வாறு நடந்திருந்து வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A runaway mini truck crashed into a tree and crumpled like an accordion