டிஜிட்டல் சேவைகள் முடக்கம்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ETM செயலிழப்பு! - பயணிகள் அவதி
Digital services suspended ETM malfunctions Chennai Metropolitan Transport Corporation buses Passengers suffer
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கும் நகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கோளாறு சரிசெய்யப்படும் வரையிலும், பயணிகளுக்கு நடத்துனர்கள் வழியாக காகித அடிப்படையிலான கைமுறை பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், UPI, NCMC, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தற்காலிகமாக ஏற்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நகரப் பேருந்துகளில் பயன்பாட்டில் உள்ள ETM (Electronic Ticket Machine) கருவிகளில் எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், மின்னணு சீட்டு வழங்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சிரமமின்றி பயணம் தொடர, தற்காலிக மாற்று ஏற்பாடாக கைமுறை சீட்டு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ‘Chennai One’ செயலியும் தற்போது செயலிழந்துள்ளதால், அதன்மூலம் சேவைகளைப் பயன்படுத்த இயலாது.
தொழில்நுட்பக் குழுவினர் கோளாறை விரைந்து சரிசெய்ய தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், பயணிகளின் பொறுமையும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன என்றும் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக இடையூறுக்கு மனமாறா வருத்தம் தெரிவித்தும், விரைவில் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Digital services suspended ETM malfunctions Chennai Metropolitan Transport Corporation buses Passengers suffer