பஞ்சமி நில விவகாரம்: பட்டியல் சமூகத்தவர் கையை துண்டாக வெட்டிய மாற்று சமூகத்தினர் 10 பேர் மீது வழக்கு பதிவு..!
A case has been registered against 10 people who brutally attacked a Scheduled Caste member in the Panchami land issue
பஞ்சமி நில விவகாரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துராஜா மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பாக, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜா. இவர் கீரனூர் பகுதியில் உள்ள மொத்தம் 190.74 ஏக்கர் பஞ்சமி நிலங்களை நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுதாரரின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நான்கு மாதங்களுக்குள் சரியான விசாரணையுடன் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
குறித்த நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், பஞ்சமி நிலங்களை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த மாற்றுச் சமூகத்தை சேர்ந்தவர்கள் முன் விரோதத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முத்துராஜாவை கூலி வேலையென அழைத்து, அஜித், கருப்பசாமி, மகாராஜன், சின்னதுரை மற்றும் 18 வயது இளைஞர் உள்ளிட்ட குழுவினர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அத்துடன், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நில விவகாரத்தில் மீண்டும் தலையிட்டால் குடும்பத்தோடு உயிரை பறிப்போம் என கொலை மிரட்டலும் விடுத்து தப்பிச் சென்றனர்.

இந்தத் கொடூர தாக்குதலில் கடுமையாக காயமடைந்த முத்துராஜா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது மேலூர் காவல்துறையில் முத்துராஜா புகார் அளித்தார். இதில் அஜித், கருப்பசாமி, மகாராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A case has been registered against 10 people who brutally attacked a Scheduled Caste member in the Panchami land issue