6 நாட்கள்...நடுக்கடல்...எங்கு பார்த்தாலும் தண்ணீர்...! மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட 3 தமிழக மீனவர்கள்...!
6 days middle ocean water everywhere you look 3 Tamil Nadu fishermen rescued from brink death
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள சண்முகா நகரைச் சேர்ந்த மனோகர் (27), ரமேஷ் (29) மற்றும் புதுச்சேரி கணபதி செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகவேல் (40) ஆகிய மூவர், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரவேலின் பைபர் படகில் கடந்த 2-ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வழக்கமாக கரை திரும்ப வேண்டிய நேரம் கடந்தும் அவர்கள் வராததால் குடும்பத்தினரும் உறவினர்களும் பதற்றமடைந்தனர். இதையடுத்து, மாயமான மீனவர்கள் குறித்து பரங்கிப்பேட்டை காவலர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.இந்தத் தகவலின் பேரில் காவலர்கள், மீன்வளத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஆரம்பகட்ட தேடுதல்களில் எந்தத் தடயமும் கிடைக்காததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் நடுக்கடல் பகுதிகள் கண்காணிக்கப்பட்டதுடன், கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.இந்நிலையில், ஆறு நாட்களாக நடுக்கடலில் உயிர்ப்போராட்டம் நடத்தி வந்த மூன்று மீனவர்களும் இறுதியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தாழங்குடா கடற்பகுதியில் இருந்து சுமார் 17 கடல் மைல் தொலைவில் அலைகளுக்கு மத்தியில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை கடலோர காவல்படையினர் கண்டறிந்து மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஆறு நாட்கள் கடலின் சீற்றத்துடன் போராடிய மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம், அவர்களது குடும்பத்தினரிடையே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 days middle ocean water everywhere you look 3 Tamil Nadu fishermen rescued from brink death