திருவள்ளூர் அருகே காலை உணவில் பல்லி? பள்ளி மாணவர்கள் 36 பேர் வாந்தி, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
36 Students Hospitalized in Tiruvallur After Consuming Breakfast Scheme Meal with Alleged Dead Lizard
திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்ட 36 பள்ளி மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று வழக்கம்போல் பள்ளியில் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், சுமார் 36 மாணவர்கள் அதைச் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவர்களுக்கு அடுத்தடுத்து தீவிர வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு, சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் உடனடியாக மாணவர்களை மீட்டுத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட காலை உணவை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் இறந்துபோன பல்லி ஒன்று கிடந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. சமைக்கும் போது ஏற்பட்ட கவனக்குறைவே இந்த உணவு நச்சுத்தன்மைக்கு (Food Poisoning) காரணம் எனப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவைத் தயாரித்து விநியோகித்த மையத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காலை உணவு சாப்பிட்ட சிறு குழந்தைகள் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியிலும் அப்பகுதியிலும் கடுமையான கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
English Summary
36 Students Hospitalized in Tiruvallur After Consuming Breakfast Scheme Meal with Alleged Dead Lizard