''ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்''; ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் சீண்டல் வழக்கில் பழனிசாமி ஆவேசம்..!
Palaniswami expresses outrage over the Gem Veeramani case calling it a shameful disgrace that makes society hang its head in embarrassment
''ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.'' ''பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.'' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
இதுபோன்ற சென்சிட்டிவ் ஆன, பல ஆண்டுகள் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும்போது, காவல் துறை இந்த வழக்கை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும்.
தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல் துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.
இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்''எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Palaniswami expresses outrage over the Gem Veeramani case calling it a shameful disgrace that makes society hang its head in embarrassment