2030-க்குள் 20,000 மெகாவாட் சூரிய சக்தி இலக்கு...! - தமிழக அரசின் பிரம்மாண்ட பசுமை ஆற்றல் திட்டம்...!
20000 MW solar power target by 2030 Tamil Nadu government massive green energy project
தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் வாயு அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு கூடுதலாக காற்றாலை மற்றும் சூரிய ஒளி சக்தி மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில் தமிழகத்தில் சராசரியாக சுமார் 19 ஆயிரம் மெகாவாட் மின்சார தேவை நிலவுகிறது. வரும் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், மின்சார தேவை 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் மெகாவாட் வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் திறனை எட்டும் இலக்குடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பில் பெரும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களையும் சூரிய சக்தி மாவட்டங்களாக மாற்றும் வகையில் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.முக்கியமாக, நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியை குறைத்து, சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற பசுமை ஆற்றல் மூலங்களை அதிகரிப்பதற்கு தமிழகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதன் பயனாக கடந்த மாதம் தமிழகத்தில் சூரிய மின்சார உற்பத்தி 5.48 கோடி யூனிட்களை எட்டியதாக புதிய சாதனை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும், சூரிய சக்தி உற்பத்தி உயர்வு மின்சார விநியோகத்திற்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளது.
இருப்பினும், சூரிய மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை மின்சார கட்டமைப்பில் (கிரிட்) இணைக்கும் போதிய வசதிகள் இல்லாததால் சில நேரங்களில் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும் சூழலும் உருவாகி வருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
20000 MW solar power target by 2030 Tamil Nadu government massive green energy project