தமிழகத்தில்'ரேபிஸ்' தாக்கம்: ஏழு மாதங்களில் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிப்பு; தடுப்பூசி போட்டாலும் தொடர் சிகிச்சை அவசியம்..!
20 people die of rabies in Tamil Nadu in seven months and even after vaccination follow up treatment is necessary
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 'ரேபிஸ்' நோயால், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து, மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் ஏற்படக்கூடிய, 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, மனிதர்களையும், செல்லப் பிராணிகளையும் காக்க தடுப்பூசி மட்டும் ஒரே தீர்வு.

பொதுவாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதற்கு காரணம் தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேபிஸ் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய்க்கடி காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ அல்லது உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர்.

நாய் கட்டிகளின் போது ஏற்படும் ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. மேலும் காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, சிகிச்சை பெற வேண்டியது அவசியமானது.
அதிலும் பாதிக்கப்பட்டவர்கள், முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21-வது நாள் என, நான்கு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ள்ளனர். இது போன்ற தொடர் சிகிச்சைகளை தவற விடுவோருக்கு, ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயம் என்பதை நினைவில் வைக்கவேண்டும். எனவே, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற்றால், ரேபிஸ் பாதிப்பை தவிர்க்கலாம் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
20 people die of rabies in Tamil Nadu in seven months and even after vaccination follow up treatment is necessary