மதிய உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் 19 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு... ஊட்டி பள்ளியில் திடீர் பரபரப்பு...!
19 students fall ill within minutes of eating lunch Sudden uproar at Ooty school
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உணவுடன் வழங்கப்பட்ட முட்டையை சாப்பிட்ட பின்னரே மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று மதியம் வழக்கம்போல் மாணவர்களுக்கு பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டது. உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது.மதிய உணவை சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே சில மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.மாணவர்களின் உடல்நிலை குறித்து உடனடியாக அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மற்ற மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி உள்பட மொத்தம் 19 மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மாணவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், அனைவரும் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பின்னரே மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதால், பெற்றோர் அச்சப்பட வேண்டாம் என்றும் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
19 students fall ill within minutes of eating lunch Sudden uproar at Ooty school