ஸ்ரீஹரிகோட்டாவில் மீண்டும் விண்வெளி சாதனை... இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ! - டிடிவி தினகரன் வாழ்த்து
Another space achievement Sriharikota ISRO successfully launches EOS 5 satellite TTV Dhinakaran congratulates
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிகாலை 2.55 மணியளவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி தனது பயணத்தை நிறைவு செய்து செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளிலேயே விண்ணில் வேகமாக உயரத் தொடங்கியது. திட்டமிட்ட பயணப் பாதையில் ராக்கெட் சீராகச் சென்ற நிலையில், சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.புவி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதன் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.இந்த விண்வெளி சாதனைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-5 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேலும் சிறக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய வெற்றியும் விண்வெளித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
English Summary
Another space achievement Sriharikota ISRO successfully launches EOS 5 satellite TTV Dhinakaran congratulates