சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை சம்பவம்; 05 குற்றவாளிகள் கைது; காவல் ஆணையர் விளக்கம்..!
Police Commissioner provides details regarding the arrest of 5 suspects in connection with the 550 kg silver robbery case in Salem
சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி சின்னேரி வயக்காட்டைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியின் (58) வெள்ளிப் பட்டறையின் பூட்டை உடைத்து, முகமூடி அணிந்து காரில் வந்த கும்பல் 550 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்ப்பில், சேலம் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தஞ்சாவூரில் 05 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வெள்ளியை திருடிச்சென்ற குற்றவாளிகள் பிடிபட்டது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில் தெரிவித்துள்ளதாவது;
இந்தச் சம்பவத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொள்ளையர்களைப் பிடித்துள்ளதாகவும், இன்னும் 03 பேர் தலைமறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு, ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச் சென்றுவிட்டதாக கூறினார்.
இதனையடுத்து, நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்களைத் தனிப்படையில் இணைத்துக் குற்றவாளிகளைக் கண்டறிந்ததாகவும், கொள்ளையடித்த பிறகு சுமார் 2,400 கிலோ மீட்டர் தூரம் சுற்றியுள்ளனர். இவர்கள் ஒரு இடத்தில் கூட சுங்கச்சாவடியைப் பயன்படுத்தவில்லை என்றும், இதனால் இவர்களைப் பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சுமார் 2.30 மணி நேரம் நின்றிருந்தது. அதன் மூலமாகத்தான் கொள்ளையர்களை நெருங்கியதாக தெரிவித்தார்.
அத்துடன், இந்தச் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அபிஷேக், ஏற்கெனவே கோவையில் கொலை வழக்கு ஒன்றில் கைதானவர் என்று குறிப்பிட்டார்.
மேலும் சிலரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலைகளால், இனி முக்கிய இடங்களில் இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும், வெள்ளிப் பட்டறை மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாக லாக்கர் பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
English Summary
Police Commissioner provides details regarding the arrest of 5 suspects in connection with the 550 kg silver robbery case in Salem