தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பேரணி; மாணவர்கள், ஆர்வலர்களை கைது செய்த டெல்லி போலீசார்..!
Delhi Police take action against students and activists during a protest directed at CEC Gyanesh Kumar
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராக டெல்லியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி இன்று (அக். 23) நடைபெற்ற போராட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் அமைந்துள்ள கோலே டக் கானா பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியும், ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியும் போராடினர்.
இந்தப் பேரணியில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கராத் மற்றும் ஏராளமான மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த பேரணி, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றடைவதற்கு முன்னதாகவே மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், மத்திய டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளதாககே கூறப்படுகிறது.
English Summary
Delhi Police take action against students and activists during a protest directed at CEC Gyanesh Kumar