கோவை மாணவர் உயிரிழந்த விவகாரம்: சாதியப் பாகுபாட்டைத் தூண்டிய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை..!
MH Jawahirullah calls for action against teachers who incited caste based discrimination in the case involving the death of a student in Coimbatore
கோவையில் பிளஸ் 1 மாணவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சாதியப் பாகுபாட்டைத் தூண்டிய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''கோவையில் பிளஸ் 1 மாணவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்தத் துயரமான சம்பவத்தில், சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் அருண் குமார் மற்றும் ஆசிரியர் விஜய குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கல்வி நிறுவனங்கள் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டிய இடங்களாகும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமத்துவ உணர்வையும் சமூகநீதிக் கொள்கைகளையும் விதைக்க வேண்டியவர்கள். அத்தகைய பொறுப்பில் இருப்பவர்கள் மீது சாதியப் பாகுபாட்டைத் தூண்டும் வகையில் செயல்பட்ட குற்றச்சாட்டு எழுந்திருப்பது கல்வித்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது.
சாதியின் பெயரால் ஒரு மாணவர்கூட அவமானப்படுத்தப்படுவதோ, அச்சுறுத்தப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ அனுமதிக்க முடியாது. மாணவர்களின் பாதுகாப்பையும் மனநலத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய பள்ளிகளில் சாதியப் பாகுபாட்டுக்கு இடமளிப்பது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவக் கோட்பாட்டுக்கும் சமூகநீதிக்கும் எதிரானதாகும்.
அதேவேளையில், மாணவரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணங்களையும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் காவல்துறையினர் எவ்வித அரசியல் அல்லது நிர்வாக அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையாகவும் முழுமையாகவும் விசாரிக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு, பள்ளிகளில் சாதியப் பாகுபாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் சமத்துவம், மனிதநேயம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வையும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் வலுப்படுத்த வேண்டும்.
ஒரு மாணவரின் உயிரிழப்பும், ஒரு மாணவரின் கண்ணியமும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது. சாதியப் பாகுபாடற்ற கல்விச் சூழலை உருவாக்குவது அரசின் கடமை மட்டுமல்ல; அது நமது சமூகத்தின் எதிர்காலம் குறித்த பொறுப்புமாகும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
MH Jawahirullah calls for action against teachers who incited caste based discrimination in the case involving the death of a student in Coimbatore