சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர் இவரா? அஸ்வின் சொன்ன தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு!
Will he be CSK next coach Expectations soar following the information shared by Ashwin
சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளமிங் சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிளமிங் தலைமையில் சிஎஸ்கே ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால் சமீபத்திய சீசன்களில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், புதிய பயிற்சியாளர் மூலம் அணியின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹேமங் பதானி, ஆடம் வோஜஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் பயிற்சியாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனும் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதனிடையே அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில், இயன் மோர்கனின் பெயர் சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்காக பேசப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மோர்கனுடன் சில ஐபிஎல் அணிகள் ஏற்கனவே பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பேசியதாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்ததாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன், நவீன டி20 கிரிக்கெட்டை புரிந்து கொண்ட சிறந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். எனவே சிஎஸ்கே அணியின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த மோர்கன் உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த மாதம் இங்கிலாந்தில் முகாமிட்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் பொறுப்பு தொடர்பாக சிலரை அவர் சந்தித்ததாக கூறப்படும் நிலையில், தோனி - இயன் மோர்கன் சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சென்னையில் சிஎஸ்கேவுக்கு சொந்தமான மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிஎஸ்கேவின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இயன் மோர்கனா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Will he be CSK next coach Expectations soar following the information shared by Ashwin