டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கம்? – இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பார்த்தீவ் படேல் வலியுறுத்தல்
Sanju Samson dropped from T20 World Cup Parthiv Patel insists on giving Ishan Kishan a chance
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் 25 ரன்களை கூட கடக்க முடியாமல் தடுமாறியுள்ளார். அதேபோல், விக்கெட் கீப்பிங்கிலும் முக்கியமான தருணங்களில் பந்துகளை தவறவிடுவதால், அணிக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல், இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்த்தீவ் படேல்,
“நான் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷனை விளையாட வைப்பேன். சஞ்சுவை வெளியே அமர வைத்துவிட்டு, இஷானை விக்கெட் கீப்பர்-பேட்டராகத் தேர்வு செய்வேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
“டி20 உலகக்கோப்பைக்கான என் முதன்மை விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை நான் கருதினால், ஐந்தாவது டி20 போட்டியிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் அவரையே விளையாட வைப்பேன். உலகக்கோப்பைக்கு முன்பாக திலக் வர்மா முழு தகுதிக்கு வந்தால், அவருக்காக ஒரு இடத்தை வைத்திருக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தால், ஏன் காத்திருக்க வேண்டும்? இப்போதே மாற்றத்தை செய்யலாம்,” என்றும் கூறினார்.
இஷான் கிஷன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பி, தனது பேட்டிங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், டி20 உலகக்கோப்பையில் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டியிருப்பதால், அந்த தயாரிப்பை இப்போதே தொடங்குவது சிறந்தது என்றும் பார்த்தீவ் படேல் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகளால், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வில் பெரிய மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சஞ்சு சாம்சனின் தொடர்ச்சியான தோல்வி மற்றும் இஷான் கிஷனின் மீண்டும் எழும் ஃபார்ம், தேர்வாளர்களுக்கு கடினமான முடிவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Sanju Samson dropped from T20 World Cup Parthiv Patel insists on giving Ishan Kishan a chance