ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரச்சின் ரவீந்திரா! கே.கே.ஆர் அணிக்கு புதிய பின்னடைவு – என்ன காரணம்?
Rachin Ravindra withdraws from IPL series New setback for KKR team what is the reason
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தடுமாறி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி, அதன் பின்னர் பல மாற்றங்களை சந்தித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து விலகியதையடுத்து, அனுபவ வீரர் அஜின்க்யா ரஹானே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் கே.கே.ஆர் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 4 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. மேலும் ஒரு போட்டியில் தோற்றாலும் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில், அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமாக, அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் அவர் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ரச்சின் ரவீந்திரா, சர்வதேச தொடரை முன்னிட்டு நாடு திரும்பி பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திராவுக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அணியின் இளம் திறமையான வீரர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட அவர் விலகியிருப்பது, ஏற்கனவே சிக்கலில் இருக்கும் கே.கே.ஆர் அணிக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.
English Summary
Rachin Ravindra withdraws from IPL series New setback for KKR team what is the reason