துயர சம்பவத்திற்கு மருந்து...! கரூருக்கு இன்று அதிரடியாக விரையும் முதல்வர் விஜய்...! - 32 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை...! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் இன்று அரசியல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் மையமாக மாறுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

அதேநேரத்தில், ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய தொழிற்திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், கடந்த மே மாதம் 10-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

அதன்பின்னர், கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.அதன் தொடர்ச்சியாக, இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய், காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.

காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.பின்னர் காலை 10.40 மணியளவில் கார் மூலம் கரூருக்கு செல்லும் முதலமைச்சர் விஜய், மதியம் 12.45 மணிக்கு அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து, தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் பொதுமக்களை நேரில் சந்தித்து, கையசைத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு சாலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பிற்பகல் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், 3 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்த பின்னர், மாலை 4.10 மணிக்கு கரூரில் இருந்து திருச்சிக்கு புறப்படும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து மாலை 6 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், அட்லஸ் கலையரங்கம் முதல் அரசு சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் வசதிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ள அட்லஸ் கலையரங்கம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cure tragedy Chief Minister Vijay rush Karur today Government work orders 32 families


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->