இப்படி ஆடுறது ரொம்ப தப்பு..இந்திய அணி இத மாத்தணும்-இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கரின் அட்வைஸ்!
Playing like this is very wrong The Indian team needs to change this Sunil Gavaskar advice to the Indian team
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று வரும் இந்திய டி20 அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் கோப்பையை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்தப் பெரும் தொடரில் இந்திய அணி மிகப் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவதால், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி, அமெரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடியது. எளிதான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ஏற்பட்ட இந்த சரிவு, இந்திய அணியை கடும் அழுத்தத்திற்குள் தள்ளியது.
ஆனால், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான மற்றும் நிதானமான ஆட்டம் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டது. அவரது ஆட்டத்தின் மூலம் இந்திய அணி கடைசியில் வெற்றியை உறுதி செய்தாலும், அந்த வெற்றி எளிதானதாக இல்லாமல் கடும் போராட்டத்தின் மத்தியில் கிடைத்தது என்பதே உண்மை.
இந்த சூழலில், இந்திய அணியின் பேட்டிங் சரிவை சுட்டிக்காட்டி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசுகையில், “பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட முயன்று எட்டு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் வெளியேறினால், அது மிகப் பெரிய சிக்கலை உருவாக்கும். அனுபவம் வாய்ந்த, வலுவான அணிகளுக்கு எதிராக இப்படியான சரிவு ஏற்பட்டால், தோல்வியிலிருந்து தப்பிக்க முடியாது” என்று கூறினார்.
மேலும், உலகக் கோப்பை போன்ற உயர்மட்ட தொடரில் பெரிய அணிகளை எதிர்கொள்ளும்போது, பவர்பிளே ஓவர்களை நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் அணுக வேண்டியது அவசியம் என்றும் கவாஸ்கர் வலியுறுத்தினார். இந்த எச்சரிக்கை, இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் தங்களின் பேட்டிங் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
Playing like this is very wrong The Indian team needs to change this Sunil Gavaskar advice to the Indian team