ஐ.பி.எல். அதிர்வு: முஷ்தபிசுர் நீக்கம்… வங்காளதேசம் உலகக் கோப்பை புறக்கணிப்பு மிரட்டல்...!
IPL shock Mustafizur dropped Bangladesh threatens to boycott the World Cup
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியில் வங்காளதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமான் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இந்து அமைப்புகள், அவர் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கக் கூடாது என போராட்டத்தில் இறங்கின.
கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, முஷ்தபிசுர் ரகுமானை அணியில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ கோரியது.

இதனை ஏற்று, கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை வெளியேற்றுவதாக அறிவித்தது.இதற்கு கடும் எதிர்வினை காட்டிய வங்காளதேசம், “எந்த காரணமும் இல்லாமல் எங்கள் வீரரை நீக்கியுள்ளனர்” என குற்றம்சாட்டி, டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா செல்லமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது.
மேலும், வங்காளதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்புக்கு தடை விதித்து, தங்களின் உலகக் கோப்பை ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றுமாறு ஐ.சி.சி.-க்கு கடிதம் எழுதியது.இந்த விவகாரத்தில் உணர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் கருத்து தெரிவித்தார்.
ஆனால், அவரை ‘இந்தியாவின் முகவர்’ என வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் நஸ்முல் இஸ்லாம் கடுமையாக விமர்சித்தார். இதனால் கொதித்தெழுந்த வீரர்கள் நலச் சங்கம், அனைத்து உள்ளூர் லீக் போட்டிகளையும் புறக்கணித்தது.
இதன் விளைவாக வங்காளதேசத்தில் ஒரு நாள் முழுவதும் லீக் போட்டிகள் நடைபெறவில்லை. நிலைமை தீவிரமானதை உணர்ந்த கிரிக்கெட் வாரியம், நஸ்முல் இஸ்லாமை நிதி குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.
இதையடுத்து வீரர்கள் போராட்டத்தை கைவிட்டு போட்டிகளுக்கு திரும்பினர். இருப்பினும், நஸ்முல் இஸ்லாம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வீரர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
IPL shock Mustafizur dropped Bangladesh threatens to boycott the World Cup