IPL CSK: ‘தல’ மீண்டும் மைதானத்தில் களம் காண்பது உறுதியானது!
IPL CSK MS Dhoni 2026
ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்கிறார் எம்.எஸ். தோனி. அவர் இல்லாமல் ஐபிஎலும், சென்னை அணியும் முழுமையடையாது என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்தும் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்திகள் அடிக்கடி கிளம்பி வருகின்றன. ஒவ்வொரு முறையும் அதனை மறுத்து, “சென்னைக்காக தொடர்ந்து விளையாடுவேன்” என தோனி தெளிவாக கூறியிருந்தாலும், அவரின் எதிர்காலம் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ். தோனி ஆடவுள்ளார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. அவர் சிறந்த உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் உள்ளார். புகழ்பெற்ற இந்த வீரர் 2026 ஐபிஎல் சீசனில் மீண்டும் சென்னைக்காக களமிறங்குவார்” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாகியதும், சமூக வலைதளங்களில் சென்னை ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் திளைத்தனர். ‘தல’ மீண்டும் மைதானத்தில் களம் காண்பது உறுதியானது என உற்சாகக் கருத்துகள் மழையாக பதிவாகி வருகின்றன.