ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் முதல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி.!
India wins ODI series against South Africa
தென் ஆப்பிரிக்க அணியுடனான 03 வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 09 விக்கெட்டுகளில் வெற்றி பெற்ற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 02-01 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான 02 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக அகைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடின.
இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றிப்பெற்றன.1-1 என சமநிலையில் இருந்த தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் தரப்பில் டிகாக் 106, பவுமா 48 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர். அத்துடன், ரிக்கல்டன், மார்க்ரம் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இளம் நம்பிக்கை நட்சத்திரம் டெவால்ட் பிரெவிஸ் 29 ரங்களிலும், மேத்யூ ப்ரீட்ஸ்கி 24 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 04 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 01 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.
இதில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இணைந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதானமாக இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் பிற்பாதியில் அதிரடியாக இருவரும் ரன் சேர்த்தனர்.

இதில் ரோஹித் சர்மா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஆடிய இளம் வீரரான ஜெய்ஸ்வால், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில், 39.5 ஓவர்களில் 01 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்த இந்தியா, போட்டியில் வென்றதோடு, தொடரையும் வென்றுள்ளது. போட்டியின் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார். இன்றையபோட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார். இந்நிலையில், வரும் 09-ஆம் தேதி முதல் இரு அணிகளும் 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
India wins ODI series against South Africa